வலிமையான பாரதம்; வளமான தமிழகம்

Tuesday, August 15, 2006

07. அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதிமொழி


இந்த இனிய சுதந்திர தின நன்னாளில்.. அனைத்து இளைஞர்களும் இந்த ஏழு அம்ச உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நமது குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.!!


அனைவரும் அவர் சொன்ன வழியில் ஏற்றுக் கொள்வோமாக!!

நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று இரவு டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இளைஞர்களுக்கு 7 அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்தார். அவர் கூறிய 7 அம்சங்கள் வருமாறு:-

7 அம்சங்கள்

1. நான் எனது வாழ்க்கையில் ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என உணர்கிறேன். இந்த இலக்கை அடைவதற்கு தேவையான அறிவை பெறுவேன். கடினமாக உழைப்பேன். பிரச்சினைகள் வரும்போது அவற்றை சமாளித்து வெற்றி பெறுவேன்.

2. எனது நாட்டின் இளைய சக்தியாக நான் உழைப்பேன். எடுத்துக் கொண்ட அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவதற்காக துணிவுடன் உழைப்பேன். பெற்ற வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவேன்.

3. என்னையும், எனது வீட்டையும், சுற்றுப்புறத்தையும், அண்டைப் பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் எப்போதும் வைத்துக் கொள்வேன்.


4. உள்ளத்தின் நேர்மை குணத்தில் அழகையும், குணத்தின் அழகு வீட்டில் நல்லிணக்கத்தையும், வீட்டின் நல்லிணக்கம் நாட்டில் ஒழுங்கையும், நாட்டின் ஒழுங்கு உலகத்தில் அமைதியையும் கொண்டு வரும் என உணர்ந்துள்ளேன்.

5. ஊழல் இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ்வேன். மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குவேன்.

6. நாட்டில் நான் அறிவு தீபத்தை ஏற்றுவேன். அது என்றும் சுடர்விட உறுதி கொள்வேன்.

7. எந்தப்பணி செய்தாலும் அதை செம்மையாக செய்யும் போது 2020-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி பெற்ற இந்தியா என்ற குறிக்கோளை அடைவதற்கு நானும் பங்காற்றுகிறேன் என்பதை உணர்ந்துள்ளேன்.



மேற்கண்ட 7 அம்ச உறுதிமொழியை அப்துல் கலாம் பிரமாணம் செய்து வைத்தார்.

நான் இந்த உறுதிமொழிகளை இன்று ஏற்றுக் கொண்டுவிட்டேன்.. நீங்க..?

06. முதல் குடிமகனுடன் முப்பது நிமிடங்கள் - III (நிறைவுப் பகுதி)




அனைவருக்கும் எங்கள் யங் இந்தியா குழு சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!



முதல் குடிமகன் அப்துல் கலாமுடன் நடிகர் விவேக் நேர் காணல்.நன்றி: குமுதம் 09 ஆகஸ்ட் 2006 - தொடர்ச்சி.. இத்தொடரின்..


  1. முதல் பகுதியை இங்கு காணலாம்
  2. இரண்டாம் பகுதியை இங்கு காணலாம்

இந்தியாவின் வளர்ச்சி விவசாயம் சார்ந்து இருக்க வேண்டுமா? அல்லது தொழிற்சாலைகள் முலம் அமைய வேண்டுமா?"

"பரப்பளவில் மிகப் பரந்த இந்தியாவில் மக்கள் தொகை அதிகம்தானே இருக்கிறது! எனவே இரண்டுமே முக்கியம்தான். ஆனால் டெக்னாலஜி இரண்டிலுமே முக்கியம், விவசாய விஞ்ஞானிகளும் தொழில் சார்ந்த வல்லுனர்களும் இந்தியாவில் மிகச் சிரந்து விளங்குகிறார்கள். இந்திய விஞ்ஞானிகள் உலகத்தரம் வாய்ந்தவர்கள்"

"ஆமாம் சார்! அக்னிச் சிறகுகள் படிக்கும் போது.. தங்களைப் பற்றியும், தங்கள் கூடப் பணியாற்றிய சக விஞ்ஞானிகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.. இன்னொரு முக்கியமான விஷயம்..

மர்ம நாவல்களும், காமிக்ஸும் விரும்பிப் படிக்கும் மாணவ சமுதாயம், கடந்த சில ஆண்டுகளில் அதிகம் படித்த புத்தகம்.. அதிகம் விற்பனையான புத்தகம் 'அக்னிச் சிறகுகள்'தான் சார்"


ஆமோதிக்கும் வகையில் தலையாட்டுகிறார்! திடீரென்று எதையோ யோசித்தாற் போல்...

"நான் சொல்கிறதை எழுதிக்கோங்க"

"மனிதன் சிரித்தால் பெரு வாழ்வு பெறுவான்!
மனிதன் பெரு வாழ்வு பெற்றால் நாடு மலர்ச்சி அடையும்!"

சற்று நேர உரையாடலுக்குப் பின் அடுத்த கேள்விக்குத் தாவுகிறேன்.

"இந்திய மாணவர்களுக்கு எத்துறைப் படிப்பு எதிர் காலத்தில் உதவும்?"

"Knowledge Products"

"அப்படீன்னா?"

"அறிவு சார்ந்த பொருட்கள்! அதைத்தான் இப்போ I.T. என்கிறோம்."

"விவசாயம் தொழில் மற்றும் I.T. மூன்றிலும் கவனம் செலுத்த வேண்டும்."

வேற கேள்வியிருக்கா?"

தயங்கித் தயங்கி கேட்கிறேன் "சார்! சமீபத்தில் DRDO அனுப்பின அக்னியும், ISRO அனுப்பின GSLV யும் தோல்வியடஞ்சிடுச்சி. அப்போ உங்க மனநிலை என்ன?'

சர்று நேரம் ஆழ்ந்து யோசிக்கிறார்! நெடிய பெருமூச்சுக்குப் பிறகு பேசுகிறார்! குரலில் இருந்த குழந்தையின் இயல்பு அகன்றுவிட்டது. ஒரு தேர்ந்த விஞ்ஞானியின் குரலாக அது ஒலிக்கிறது.

"இது ஒரு Rare Occurrence! அபூர்வமாக நடக்கும் குறைபாடு. இது எல்லா தேச விஞ்ஞானிகளுக்கும் ஏற்படக்கூடியது. நான் விஞ்ஞானியாகப் பணி புரிந்தபோது இந்த அனுபவம் எனக்கே ஏற்பட்டது. என்னுடைய குருவும் சீனியர்களும் என்னைத் தேற்றினர். அதையே நானும் இப்போது செய்தேன். உடனடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தைரியம் கொடுத்தேன். நம் விஞ்ஞானிகள் நிச்சயம் வெல்வார்கள். மீண்டும் மீண்டும் வெல்வார்கள்."

"தேங்க் யூ சார்! அப்போ நான் புறப்படவா" என்கிறேன். "ஒரு நிமிடம்" என்றவர் 'Guiding the Souls' என்ற தனது புதிய புத்தகத்தைக் கையெழுத்திட்டுக் கொடுக்கிறார்!"

"போட்டொ எடுத்துக்கலாம்" என்கிறார்.


எடுக்கப் படுகின்றன.

"நிறைய சிரிக்க வையுங்க! செய்தி சொல்லுங்க" என்கிறார்.

அவர் கால் தொட்டு நிமிர்கிறேன்!

திடீரென்று 'இதையும் எழுதிக்கோங்க! இது உங்களுக்கு" என்கிறார்! எழுதினேன்.

'சிரிப்பைக் கொடுப்பவர் ஆண்டவனின் அருள் பெற்றவர்"

உண்மை தான். அருள் பெற்றவனாக வெளியே வந்தேன். தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கும் ராஷ்ட்ரபதி பவனை மீண்டும் ஒரு முறை அண்ணாந்து பார்த்தேன்"

அது கம்பீரமாக நிற்கிறது! நம் முதல் குடிமகனைப் போல!

கனவு பலிக்கிறது!

வெற்றி நிச்சயம்!!!

Monday, August 14, 2006

06. முதல் குடிமகனுடன் முப்பது நிமிடங்கள் - II



முதல் குடிமகன் அப்துல் கலாமுடன் நடிகர் விவேக் நேர் காணல்.நன்றி: குமுதம் 09 ஆகஸ்ட் 2006 - தொடர்ச்சி..

(இத்தொடரின் முதல் பகுதியை இங்கு காணலாம்)

இன்றைய மாணவர்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் குடுக்கச் சொன்னா நீங்க என்ன சொல்வீங்க..?

கண்ணோடு கண் பார்க்கிறார்!

சற்று யோசனையில் ஆழ்கிறார்!

இப்போது சொல்கிறார்..

"அறிவு வளர்ச்சி... அது வளர்ந்தாலே எல்லாமே சரியாகிவிடும்!"

"எங்கே பார்த்தாலும் குண்டு வெடிக்குது! வன்முறை தலை விரித்தாடுகிறது. பொது மக்கள் இதுமாதிரி பயங்கரவாதத்தை எப்படி எதிர் கொள்ளவேண்டும்?"

"விவேக், நான் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தேன். இநதுக்களிடம் வளர்ந்தேன், கிறிஸ்துவப் பள்ளியில் படித்தேன். என் அறையில் ஒரு இந்து, ஒரு கிறிஸ்துவர் என்னுடன் தங்கிப் படித்தனர். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. சகிப்புத்தன்மை இருந்தது. அது போன்ற ஒரு சூழ்நிலை இன்று மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் கிடைக்க வேண்டும்! மனோதிடமும் சகிப்புத்தன்மையுமே பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஆயுதங்கள்!"

"இலக்கை அடைவது எவ்வாறு?.."

சிரிக்கிறார்! சுறுசுறுப்பாகிறார்! எழுத்து செல்கிறார்!.. (மீட்டிங் முடிந்து விட்டதோ என்று நினைக்கிறேன்) தன் மேஜையிலிருந்து ஒரு அட்டையை எடுத்து வருகிறார்! என்னைப் படிக்கச் சொல்கிறார்!!

"லட்சியம் ஊக்கத்தை உருவாக்கும்!

ஊக்கத்தால் உயரிய எண்ணங்கள் மலரும்!

உயரிய எண்ணங்களால் உழைப்புத்திறன் பெருகும்!

உழைப்பு நற்செயல்களுக்கு ஆதாரமாகும்"

-என்று அதில் அச்சிடப்பட்டிருக்கிறது!

"ஏதாவது புரியுதா?.."

"எல்லாமே புரியுது" - என்றேன்

சினிமாவிலே காமெடி மூலமா ஒரு கருத்துச் சொல்லப்படணும்னா.. அது என்னவா இருக்கணும்னு நீங்க விரும்புறீங்க?


"ஊழல் இல்லாத சமுதாயம் வேணும்னு சொல்லுங்க!...

"அது எப்படி சாத்தியமாகும்!?..'

இதே கேள்வியை நான் ஆதிசுஞ்சுணாஞ்சேரி அப்படீங்கற ஊருக்குப் போயிருந்தப்போ 'பவானி' ன்னு ஒரு பொண்ணு என்கிட்டே கேட்டா!.."

"நீங்க என்ன பதில் சொன்னீங்க?'

"நான் இப்ப கேட்கப் போறதுக்கு நீங்க சொல்லுங்க! நம்ம நாட்டோட ஜனத்தொகை எவ்வளவு?"

"நூறு கோடியிருக்கலாம்" (இந்நேரத்துக்கு கூட்டினாலும் கூட்டியிருப்பாங்க!)

'100 கோடின்னே வெச்சுக்குவோம்.. ஒரு வீட்டுக்கு 5 பேர்னு வையுங்க.. எத்தனை குடும்பம் இருக்கும்?"

(இதென்ன வம்பு? கால்குலேட்டர் கூட எடுத்துட்டு வரலியே!)

"சார் 20 கோடி குடும்பம் சார்!"

"ஒரு குடும்பத்துல 2 குழந்தைகள்னா எவ்வளவு குழந்தைகள்?"

"இருபது இன் ட்டு இரண்டு நாற்பது கோடி சார்!"

"இந்த நார்பது கோடி பேரும் வளர்ந்து வரும் போது, அவுங்க தேவைகளுக்காக, குடும்பத்துக்காக அவங்க அப்பா, அம்மா லஞ்சம் ஊழல்னு இறங்கிடுறாங்க! அந்த நாற்பது கோடி குழந்தைகளும் தங்களோட அப்பா, அம்மா கிட்டே 'அப்பா .. அம்மா, அங்க நியாயமான வருமானத்திலே என்ன வாங்க முடியுமோ, அதை வாங்கிக் கொடுங்க! லஞ்சப் பணத்திலே, ஊழல்ல வர்ற பணத்தில் எனக்குப் புதுச்சட்டை, சைக்கிள், பிறந்தநாள் பரிசு வேண்டாம்'னு சொல்லக்கூடிய தைரியம்... அது உங்கக் கிட்டே இருக்கா' னு 'பவானி' கிட்டே கேட்டேன்!"

"என்ன ஆச்சு சார்?..."

"ஒரே அமைதி.. கொஞ்ச நேரம் கழிச்சு அந்த 50,000 மாணவர்களும் எழுந்து நின்னு 'நாங்க தயார்'னு சொல்லிக் கைத் தட்டினாங்க! மனசு நிறஞ்சுது...

"இதைப் படத்தில் சொல்லுங்க!"

"சரி சார்! இந்தாங்க இது என் அன்பளிப்பு!" 'The monk who sold his ferrari' என்ற புத்தகத்தை நான் அவருக்குக் கொடுக்கிறேன்!

"இது மாதிரி 'புக்ஸ்' கூடப் படிப்பிங்களா?"

"ஆமா சார்!"

"இந்தியாவில் படித்துவிட்டு வெளி நாட்டில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?"

உங்கள் வாழ்க்கையையும் வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளுங்கள! ஆனால் உங்கள் 'அனுபவத்தை' இந்தியாவுக்குக் கொடுங்கள்! நம் தேசத்தின் வளர்ச்சிக்கு அதை உரமாகப் போடுங்கள்!" (தமிழ் வலைப்பதிவாளர்களின் தனிக் கவனத்திற்கு - அன்புடன் சீமாச்சு)

இன்றைய இந்தியாவின் உடனடித்தேவை என்ன?

ஒரே வரியில் பதில் வருகிறது.

"Moral Education"

(நன்மார்க்கக் கல்வி! - மொழி பெயர்ப்புச் சரியா?!)

இந்தியாவின் வளர்ச்சி விவசாயம் சார்ந்து இருக்க வேண்டுமா? அல்லது தொழிற்சாலைகள் முலம் அமைய வேண்டுமா?"


(நிறைவுப் பகுதி இங்கு தொடர்கிறது..)

06. முதல் குடிமகனுடன் முப்பது நிமிடங்கள் - I


முதல் குடிமகன் அப்துல் கலாமுடன் நடிகர் விவேக் நேர் காணல்.
நன்றி: குமுதம் 09 ஆகஸ்ட் 2006


சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டலாம்! விமானம் ஓட்ட முடியுமா? ஆனால் நான் ராக்கெட்டை விட்டிருக்கிறேன்! புரியவில்லையா! முன்பு ராக்கெட் விஞ்ஞானி. இன்றோ.. நம் பாரதத்தின் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்!

ஏ.வி.எம் சரவணன் சார்..க்கு தேங்க்ஸ்!.. ஷங்கருக்கு அதை விடப் பெரிய தேங்க்ஸ்!. "சிவாஜி" ஷூட்டிங் டெல்லியில். அங்கு நான் காலையில் வாக்கிங் போனேன். காபி குடிப்பது டெல்லி சரவணபவனில்!

டாக்டர் கலாம் வசிப்பது ராஷ்ட்ரபதி பவனில்!

கம்பீரமான அந்த மாளிகையில்..!

தென்னிந்தியாவில் இருந்து அதுவும் நம் தமிழ்நாட்டில் இருந்து. அதுவும் நம்ம ராமேஸ்வரத்திலிருந்து. ஒரு அறிவியல்வாதி... அரசியல் வாதியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்!! என்ன ஒரு பெருமை!

யோசித்துக் கொண்டே நடந்து சென்ற நான்.. ஒரு பெரிய சைஸ் (xxxL சைஸ்! வட இந்தியப் பெண்மனியின் மேல் டேஷ் பண்ணிவிட்டேன்! அது வாயில் இருந்து "வண்டி வண்டியாய்" ஹிந்தி.. திட்டித் தீர்த்தார். நான் கண்டுக்கவே இல்லை! எனக்கு ஹிந்தி புரிந்தால் தானே! ஒரே இந்தியா! நானும் இந்தியன்.. அந்தப் பெண்மணியும் இந்தியன்! ஆனால் நான் பேசுவதும் அவர் பேசுவதும் ஒருவருக்கொருவர் புரியவில்லை!...

'விழிகள் பிதுங்கும் மொழிகள் ' - என்று வைரமுத்து ஸ்டைலில் அந்த நிகழ்வுக்குப் பெயர் வைத்தேன்..!

சரி மேட்டருக்கு வருவோம்!

இவ்வளவு தூரம் வந்துட்டோம்! ஜனாதிபதியப் பார்த்தால் என்ன? எனற ஒரு ஐடியா.. என் அடிமனதின் அன் டர்கிரவுண்டில் ஓட.. உடனடியாக முயற்சிகளை ஆரம்பித்த பின்.. அப்பாயிண்ட்மென் டிற்காக விண்ணப்பித்தே! இந்த இடத்தில் காந்தி கண்ணதாசன், ஜனாதிபதி மாளிக திரு. ஷெரிடனுக்கும், திரு பிரசாத்திற்கும் என் கனமான நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன்!

இங்கே சிவாஜி சிலை திறந்த அன்று.. அங்கே சிவாஜி ஷூட்டிங்கில் இருந்த எனக்கு, ஜனாதிபதி மாளிகையின் கதவு திறந்தது! .. மாலை 5 மணிக்குச் சந்திப்பு..! சக்தி சுகர்ஸ்பெருமாள்.. பெயருக்கு ஏத்த மாதிரி இனிமையான நண்பர்... அவரே வந்து அழைத்துச் சென்றார். பிரம்மாண்டமான சிவப்புக்கல் கட்டடங்களுக்கு நடுவில்... மிக மிகப்பெரிய ஹால்களைக் கடந்து.. ஏகப்பட்ட செக்யூரிட்டிகளைக் கடந்து.. ஜவான்களைக் கடந்து சென்றபோது ஏற்பட்ட உணர்வுகளை விவரிக்க குமுதம் தனி சப்ளிமெண்ட் போட்டு அதைக் காம்ப்ளிமெண்ட்டாகக் கொடுக்க வேண்டும்.!


என்னை அமரச்செய்து.. தேநீரும்..ஸ்நாக்ஸும் வழங்கினார்கள்! அந்த நேரமும் வந்தது. என்னைத் தனியே உள்ளே அனுப்ப.. அங்கே.. விசாலமான அரையில்... ஒர் ஒரத்தில் போடப்பட்டிருந்த டேபிளின் முன்னே... நம் ஜனாதிபதி கம்பீரமாக.. அறிவின் சொரூபமாக.. ஞான வ்டிவாக அமர்ந்திருந்தார்!!

"குழந்தைகளின் சிநேகிதன்"

"மாணவர்களின் மன்னன்"

"கல்விக் கூடங்களின் கலங்கரை விளக்கம்" என்றெல்லாம் மனம் மைக் பிடித்துப் பேச ஆரம்பிக்க... அதை அவரது சன்னமான குரல் கலைக்கிறது!...


"வாங்க விவேக்" - எழுந்து வருகிறார்.

"காலைத் தொட்டு எழுகிறேன்...

"உட்காருங்க! எப்படி இருக்கீங்க?"

நலம் விசாரிக்கிறார்...

நானும் எப்படி டயலாக்கை ஆரம்பிப்பது என்று தெரியாமல்.. "நீங்க எப்படி இருக்கீங்க!.. உடம்பெல்லாம் செளக்கியமா?" என்று கேட்டு வைக்க, ரெமோ ஸ்டைலில் முடியை ஸ்டைலாக ஒதுக்கிவிட்டுச் சிரிக்கிறார்! அவரே தொடர்கிறார்.

"நிறைய பேரைச் சிரிக்க வைக்கிறீங்க! இந்த் நிமிஷத்தில் எத்தனையோ மில்லியன் பேரு சிரிப்பாங்க இல்லே?"

"ஆமா சார்!"

"என்னைப் பத்தி நிறைய சொல்றீங்க இல்ல!"

"ஆமா சார்!"

"ஏன்?.." சிரிப்பு நிற்கிறது..

"ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, 'மாணவர்களின் முன்னேற்றம், கல்வி, வளமான வருங்கால இந்தியா' - இதைப் பத்திப் பேசறதுக்கும், செய்யறதுக்கும் ஒருவர் வந்திருக்கீங்க! அதான்" - என்கிறேன்!

"நல்லது.. அப்பா, அம்மா இருக்காங்களா?"

"இருக்காங்க!"

"அவங்களை நல்லாப் பாத்துக்கோங்க!.. என்கிட்டே என்ன கேக்கணும்?"

கேட்க ஆரம்பித்தேன்..

(அடுத்தப் பகுதி இங்கு தொடர்கிறது..)